Saturday, October 18, 2014

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே - பாகம் 2




 ஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது. 

தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக் கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு, ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும்? ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது. 



ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, தனது கைதுக்கு காரணம் கருணாநிதிதான் என்று உறுதியாக நம்பினார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, என்னை 27 நாட்கள் சிறையில் வைத்த கருணாநிதியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று வெளிப்படையாகவே பேசினார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ள ஜெயலலிதாவுக்கு,அவரின் எதிரியை பழிவாங்கிவிட்டு, குருவாயூர் கோவிலுக்கு யானையை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்... எதிரிகள் அழிவார்கள்... என்று சொன்னதன் அடிப்படையிலேயே இரவோடு இரவாக கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார் என்பது அப்போது பரவலாக பேசப்பட்டது. 

கருணாநிதியின் கைது, ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகர ஆணையாளராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக திமுக ஆட்சி காலத்தில் இருந்த ஜாபர் சேட் அப்போது போக்குவரத்து இணை ஆணையர். அவர்தான் கருணாநிதி செல்லும் வழிகளையெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தார். மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து, அந்த கைது நடவடிக்கையை மேற்பார்வை செய்ததே ஜாபர் சேட்தான். ஆனால், இந்த ஜாபர் சேட்டையை முழுமையாக நம்பி 2006-ல் தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு தவறுகளை இழைத்தது தனிக்கதை.

முகம்மது அலி

 கருணாநிதியின் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள் ஒருவர் கூட நிம்மதியாக இல்லை. முகம்மது அலி முத்திரைத்தாள் மோசடிவழக்கில் சிறை சென்றார். முத்துக்கருப்பன் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ரவீந்திரநாத்தும் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 


அடுத்த மாதமே, மு.க.ஸ்டாலினுக்கு ஏழு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, வாக்குமூலம் அளிக்கும்படி, ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் நாராயணன் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இந்த ஆபரேஷனையும் முன்னின்று செயல்படுத்தியது சென்னை மாநகர காவல்துறைதான். 15 ஜுலை 2001அன்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மூன்று மகள்கள், மோனிஷா, சர்மிளா மற்றும் 11 மாதக் குழந்தை டிங்கு ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். ஸ்டாலினுக்கு எதிராக சாட்சி சொல்லாவிட்டால், ஹெராயின் வழக்கில் கைது செய்யப்படுவாய் என்றுமிரட்டப்பட்டதாலேயே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ். 

ரமேஷின் அச்சம் அர்த்தமில்லாதது கிடையாது. எந்த வளர்ப்பு மகனின் திருமணத்துக்காக 100 கோடியை செலவழித்தாரோ, அதே வளர்ப்பு மகனை, ஹெராயின் வழக்கில் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. முதலில் சுதாகரன் வீட்டிலிருந்து 16 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மெல்ல மெல்ல அதைப் 16 கிராம் என்று மாற்றினார்கள். 

கருணாநிதியின் கைதைக் கண்டித்தும், காவல்துறை அராஜகங்களைக் கண்டித்தும், திமுக பேரணி நடத்துவது என்று, ஜுலை 27 அன்று நடந்த திமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.   இதை  அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்து, பல்வேறு வழிகளில் அலைக்கழித்தது. இருப்பினும் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டு, பேரணி சென்னை மெரினாவை அடைந்தபோது, வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர்.   பத்திரிக்கையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.  இந்து புகைப்படக் கலைஞர் மூர்த்தி, எக்ஸ்பிரஸ் புகைப்படக்கலைஞர் பி.ஏ.ராஜு, ஸீ டிவி கேமராமேன் மணீஷ் தனானி, அவர் உதவியாளர் ஏசைய்யா, விகடன் புகைப்படக் கலைஞர் விவேகானந்தன், நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்படக்கலைஞர் சம்பத், தினமலர் நிருபர் அருட்செல்வம் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.  
காயமடைந்த நிருபர் ஏசைய்யா
கடற்கரையில் அயோத்திக்குப்பம் அருகே, ஆயுதங்களோடு காத்துக் கொண்டிருந்த ரவுடிகள், திமுகவினரை, உருட்டுக்கட்டைகளாலும், கத்திகளாலும் கடுமையாக தாக்கினர்.    திமுக இந்த வன்முறை திட்டமிட்டு நடந்தது என்றது.  அதிமுக தலைவி ஜெயலலிதாவும், மாநகர ஆணையாளர் முத்துக் கருப்பனும், திமுகதான் வன்முறைக்குக் காரணம் என்றனர்.  ஜெயலலிதா, விஷயத்தை மூடி மறைக்க ஓய்வுபெற்ற நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.   

மூத்த பத்திதிக்கையாளர் பகவான் சிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்க தொடுத்தார்.  அந்த வழக்கை விசாரணை செய்த, நீதிபதி கனகராஜ், அரசு, நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதால், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தீர்ப்பளித்தார்.

செரினா பானு
இதையடுத்து மதுரையில் சசிகலாவின் கணவரோடு (??) நெருக்கமானவர் என்று அறியப்பட்ட செரினா என்பவர் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வீட்டில் 1.40 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஒரு சாதாரண செரினாவின் ஜாமீன் மனுவில், மேஜிஸ்திரேட் கோர்டடில், கபில்சிபல் எப்படி வந்து வாதாடினார் என்பது விளங்காத மர்மம். 


ஜெயலலிதா அரசு ஊழியர் சங்க கட்டிடத்தை
திறந்து வைத்தபோது வைக்கப்பட்ட பலகை
 27 ஜுலை 2001, அன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசினார் ஜெயலலிதா. அதிமுகவோடு, சிபிஎம் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால், புளங்காகிதத்தில் இருந்தனர் தோழர்கள். முதல்வரே நமது சங்கக் கட்டிடத்தை திறந்து வைக்க வருகிறாரே என்று ஆனந்தத்தில் திளைத்தனர். ஆனால், கூட்டம் முடியும் வரைக்கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 

அப்படி ஒரு அணுகுண்டைக் கூட்டத்தில் பேசும்போதே தூக்கிப்போட்டார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டும் இருக்கும் உங்களுக்காக (அரசு ஊழியர்களுக்காக) நான் அரசு வருவாயில் 94 சதவிகிதத்தை செலவு செய்கிறேன். இதனால் மக்கள்திட்டங்களுக்கு செலவிட முடியாத நிலையில் உள்ளேன். மக்கள் திட்டங்களுக்கு செலவிட நிதி இல்லாத காரணத்தால் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன் என்றார். திருமண வீட்டில் இழவு விழுந்ததப் போல் அதிர்ந்து போனார்கள் தோழர்கள். அதன்பிறகு பல்வேறு சோதனைகளை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை. 

15 ஆயிரம் குடும்பங்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், ஒரே நாளில் 15 ஆயிரம் சாலைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.அந்த 15 ஆயிரம் தொழிலாளர்கள் விட்ட சாபம்தான் குன்ஹா வடிவத்தில் ஜெயலலிதாவை அலைக்கழிக்கிறது. போக்குவரத்துத் துறை, ஆவின் மற்றும் குடிமைப் பொருள் வழங்குத்துறை ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அது வரை ஆண்டுக்கு 20 சதவிகிதம் போனஸாக பெற்று வந்தனர். அரசின் சிக்கன நடவடிக்கை காரணமாக இனி அவ்வளவு போனஸ் தர இயலாது. வெறும் 8.33 சதகிகிதம் மட்டுமே போனஸ் என்று அறிவித்தது. 

அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, 12 நவம்பர் 2011 முதல்போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த வேலை நிறுத்தத்தை உடைக்க அற்பத்தனமாக பலவேலைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா. புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர், போராடிய தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கிராமங்களில் ஓடிய மினி பஸ்கள் நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. தொழிலாளர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 17 நாட்களுக்குப் பிறகு அந்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்த 17 நாட்களில் அரசு சந்தித்த இழப்பு 136 கோடி. ஆனால் 20 சதவிகித போனஸ் வழங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் செலவு 60 கோடி. இப்படிப்பட்ட வறட்டுத்தனமான பிடிவாதம் பிடித்தவர்தான் ஜெயலலிதா. அதோடு அவர் ஒய்ந்துவிடவில்லை. 

அரசு ஊழியர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதலை தொடுத்துக் கொண்டே இருந்தார். பண்டிகை கால முன்பணம் ரத்து, சரண் விடுப்புச் சலுகை ரத்து, போனஸ் ரத்து, சொந்த சேமிப்பு நிதியிலிருந்து கடன் பெறுவதற்கு கட்டுப்பாடு என்று தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் பழிவாங்கப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டனர்.. பால் விலை, மின்சாரக்கட்டணம், பேருந்துக் கட்டணம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்கச் செல்வோருக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. கோயில்களில் செருப்புகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. விவசாயிகளின் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச புடவை வேட்டியை கொடுக்கவில்லை. 5 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் ரேஷன் அட்டைகளில் எச் முத்திரை குத்தி அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களின் இலவச பஸ் பாஸ் தடை செய்யப்பட்டது. இப்படி அடுத்தடுத்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் அகமகிழ்வோடு ஈடுபட்டார் ஜெயலலிதா. 

அரசு ஊழியர்களின் ஓய்வுகாலப் பலன்களிலும் கை வைத்தார் ஜெயலலிதா. ஓய்வூதியம் பெறத் தகுதிகாலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 33ஆண்டுகளாக உயர்த்தினார். ஓய்வு காலத்தில் வழங்கப்படும் பல்வேறு பலன்களில் கை வைத்தார். தமிழகம் முழுக்க உள்ள அத்தனை அரசு ஊழியர்களிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, 27 ஜனவரி 2002ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பலத்த ஆதரவு இருந்தது.                 

அரசு ஊழியர் சங்கத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன்

7 பிப்ரவரி 2002 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி தொகுதியில் எப்போது வேண்டுமானாலும் நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருந்ததால், நிதியமைச்சர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், படிப்படியாக சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்து, 23 அக்டோபர் 2002 முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பெருமளவில் கலந்துகொண்டனர். 

காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் எப்போதும் ஒரு இணக்கம் இருக்கும். ஆனால், இந்தவேலை நிறுத்தத்தின் போது, கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட இந்தச் சங்கங்களின் தலைவர்கள் வீடுகளில் புகுந்த காவல்துறையினர், சங்கத் தலைவர்களின் மனைவிகளையும், மகள்களையும் விபச்சார வழக்கில் கைது செய்வோம் என்று அச்சுறுத்தினர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, வேலை நிறுத்தத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்று இறுமாப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா, டெஸ்மா உள்ளிட்ட அனைத்து சட்டங்களும் பாயும் என்றார் ஜெயலலிதா. பிறகு மனம் மாறிய ஜெயலலிதா, சங்கங்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் இறுதியில், எவ்விதமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் இருக்காது என்று ஒப்பந்தமானது. சலுகைகள், படிப்படியாக வழங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ஜெயலலிதா. 

இதையடுத்து, மீண்டும் 2 ஜுலை 2003 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டது. 27 ஜுன் 2003 அன்று மீண்டும் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜெயலலிதா. அந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேலை நிறுத்தத்துக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, நள்ளிரவில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் 30 ஜுன் 2003 அன்று இரவு கைது செய்யப்பட்டனர். 2 ஜுலை 2003 முதல் தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தம், 1 ஜுலை அன்றே தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தை காவல்துறையின் உதவியோடு அடக்க முனைந்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர்கள் கூட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. கைக்குழந்தையோடு பெண்கள் கைது செய்யப்பட்டனர். பணிக்குத் திரும்பாத பெண் ஊழியர்கள் விபச்சார வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே மிரட்டப்பட்டனர். அரசுக் குடியிருப்புகளில் புகுந்த காவல்துறை, இன்று இரவே வீட்டைக் காலி செய்யுங்கள் என்று மிரட்டியது. 

டெஸ்மா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, ‘அரசு ஊழியர்களுக்கான பணி நீக்க ஆணையை தனித்தனியாக தர வேண்டியதில்லை.அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டினால் போதும்’ என்று மாற்றம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. 04 ஜுலை 2003 அன்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, ஏப்ரல் மாதம் 2003 முதல் பின்தேதியிட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரின்பெயர்களையும் வருகைப்பதிவேட்டில் இருந்து எடுத்து, அதை டைப் அடித்து நோட்டீஸ் போர்டில் ஒட்டினார்கள். வேலை நீக்க உத்தரவை பார்த்த பல அரசு ஊழியர்கள் கதறினார்கள். அழுதார்கள். மீண்டும் பணிக்கு திரும்புகிறோம் என்று மன்றாடினார்கள். ஆனால், எந்த அதிகாரியும் அவர்களின் கதறலுக்கு செவி சாய்ப்பதாக இல்லை. நோட்டீஸ் போர்டில் பெயர் இருந்தால் அப்படியே திரும்பிச் செல்லுங்கள் என்றனர். வேலை நிறுத்த விவகாரம் நீதிமன்றம் போனது. இந்திய வரலாற்றிலேயே கடைந்தெடுத்த ஊழல் பேர்வழியாக இருந்த நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில், அவர் வீட்டில் சிறப்பு விசாரணையாக இவ்வழக்கு நடைபெற்றது. 6 ஜூலை 2003 மாலை 6 மணியளவில், இந்த விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் இறுதியில், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், பணி நீக்க உத்தரவுக்கு தடை பிறப்பிப்பதாக கூறினார் தினகரன். அதன்படி, சங்கத் தலைவர்களிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழியைப் பெற்று, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் விடுதலை மற்றும் அவர்களின் பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

அப்போது உளவுத்துறை டிஜிபியாக இருந்தவர் கே.நடராஜன். நிதித்துறைச் செயலாளர் நாராயணன். தலைமைச் செயலகத்தில் இதையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடராஜனிடம், நீதிபதி பி.டி.தினகரனின் தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டது. "என்ன இது..... முட்டாள்த்தனமான தீர்ப்பாக இருக்கிறதே.... முட்டாள் மாதிரி நீதிபதிகள் தீர்ப்பளித்தால் நாம் எப்படி சும்மா இருப்பது? உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று கூறி, இரவோடு இரவாக, அப்போது அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த என்.ஆர்.சந்திரனை எழுப்பி மேல் முறையீடுசெய்ய அறிவுறுத்தினார் நடராஜன். அந்தக் கூட்டம் முடிந்ததும் ஒரு இளம் அதிகாரியை தன்னுடைய காரிலேயே வரச்சொல்லி உத்தரவிட்டார் நடராஜன். அந்த இளம் அதிகாரியின் நண்பர் தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி நள்ளிரவு 12 மணிக்கு, அந்த இளம் அதிகாரியை அழைத்து "அண்ணா, அவரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போராங்கண்ணா... ஏதாவது பண்ணுங்கண்ணா" என்று ஏழு மாத கர்ப்பத்தோடு கதறுகிறார். அந்த இளம் அதிகாரி காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்? கையறு நிலையில், வேதனையை மென்று விழுங்கியபடிஇருந்தார். 1.76 லட்சம் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்தது சரியே என்று, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து விட்டு, காரில் டிஜிபி அலுவலகம் திரும்பிய உளவுப்பிரிவு டிஜிபி நடராஜன் என்ன பேசிக்கொண்டு வந்தார் தெரியுமா? "நேத்து சாமி படம் பாத்தேன். அதுல விவேக் என்னமா கலக்கியிருக்கான் தெரியுமா? எட்டு போடச் சொன்னா 11 போட்டுக் காட்றேன் பாரு ன்னு கலக்கியிருக்கான். செம்ம ஜோக்கு" என்று 1.76லட்சம் ஊழியர்களின் குடும்பத்தை தெருவில் நிறுத்திவிட்டு, ஜோக்கடித்துக் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட அயோக்கிய அதிகாரிகளை நம்பித்தான்அன்று அரசாங்கம் நடத்தி வந்தார் ஜெயலலிதா. 

இறந்துபோன வீரப்பன் உடலை வைத்து
என்கவுன்டர் நடத்தியது இந்த விஜயக்குமார்தான்
இவர் ஒரு பக்கம் என்றால், சென்னை மாநகர ஆணையாளராக இருந்த விஜயக்குமார் இன்னொரு திருவாத்தான். புரட்சித் தலைவியின் மனதைக்குளிர வைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை நகரில் மட்டும் 2500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டை எடுத்து, அதில் உள்ளவர்களின் பெயர்கள் அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டன. 12கான்ஸ்டபிள்கள், இரவு பகலாக டைப் மிஷினைப் பயன்படுத்தி எப்.ஐ.ஆர். தயாரித்தனர். விஜயக்குமார் சொல்லி விட்டார் என்றதும், இந்த எப்.ஐ.ஆர்.களை சிரமேற்கொண்டு இரவு முழுவதும் அமர்ந்து தயாரித்தவர், அப்போதைய மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 

ஆயுதப்படை காவலர்கள், சென்னை ஷெனாய் நகர், அண்ணா நகர், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர் குடியிருப்புகளில் புகுந்து வேட்டையாடினார்கள். பி.டி.தினகரன் விதித்த தடை உத்தரவை எதிர்த்து, அரசு இரவோடு இரவாக ஜெயலலிதா அரசாங்கம் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வு, வீட்டிலேயே அமர்ந்து, எதிர்த்தரப்பை ஒரு வார்த்தை கேட்காமல், பி.டி.தினகரன் தீர்ப்புக்கு தடை விதித்தது. 7 ஜுலை 2003 முதல் 11 ஜுலை 2003 வரை, இந்த வழக்கின் விசாரணை, சுபாஷன் ரெட்டி அமர்வு முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் பணி நீக்க உத்தரவுக்கு எதிராகத் தனித்தனியாக வழக்கு தொடுக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சி.ஐ.டி.யு. தலைவர் டி.கே.ரங்கராஜன் மற்றும் தொழிலாளர் முற்போக்கு பேரவையின் தலைவர் செ.குப்புசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் முன்னிலையில் விசாரணை நடந்தது.விசாரணையின் இறுதியில் 6072 பேரைத் தவிர்த்து, மற்றவர்கள், பணிக்குத் திரும்பலாம் என்ற உத்தரவை அவர் பிறப்பித்தார். 

இந்த 6072 பேர்களை வேலைக்கு சேர்க்கலாமா? வேண்டாமா? என்பதை விசாரிக்க மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்து முடிவு செய்யும் என்றும் அவர் தன் உத்தரவில் குறிப்பிட்டார். அந்த விசாரணையை நடத்தியவர்கள் நீதிபதி சம்பத், நீதிபதி தங்கவேல், மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியம். 

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நடத்தையைநான் விவரிப்பதை விட பாரதியார் பாடல் வரிகளால் விவரிப்பது பொருத்தமாக இருக்கும். 

"வாலைக்குழைத்து வரும் நாய்தான் 
அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா" 

இந்த இடத்தில் மனிதர்க்கு என்பதை ஆட்சியாளருக்கு என்று மாற்றிப் படித்தால் சரியான பொருள் வரும். மூன்று நீதிபதிகளும் விசாரணையை கண் துடைப்பாகவே நடத்தினர். மூன்று நீதிபதிகளுக்குள்ளும் கடும் போட்டி. எதில் போட்டி என்று குழம்பாதீர்கள்... அரசாங்கத்தின் பணி நீக்கம் சரியென்று பரிந்துரை செய்து, ஜெயலலிதாவிடம் யார் நல்லபெயர் வாங்குவது என்பதில்தான் அவர்களுக்குள் அத்தனை போட்டி. 

மூன்று நீதிபதிகளும், தனித்தனியாக தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டனர். 6072 ஊழியர்களில் வெறும் 75 ஊழியர்கள் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பித்தனர். சம்பத் மற்றும் மலை சுப்ரமணியன் டிசம்பர் 26 அன்றும், தங்கவேல் டிசம்பர் 31 அன்றும் தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டனர். நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களில் 412 பேரின் டிஸ்மிஸ் உத்தரவு செல்லும் என்றும், பலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தம், பதவி உயர்வு ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளையும் சேர்த்து பரிந்துரைத்தனர் 

இந்த நீதிபதிகள். டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1,70,241 ஊழியர்களில் 6072 பேரை தனியாக கட்டம் கட்டி, அவர்களில் 5715 பேர்களின் வழக்குகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 5 அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி, அவர்களின் தலையெழுத்தை தீர்மானித்தார்கள். 

இந்த நீதிபதிகள் தீர்ப்பெழுதிய லட்சணத்தை ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்ப்போம். தனராஜ், ராதாகிருஷ்ணன், சித்தைய்யன், வாசுதேவன்,தங்கராஜ் மற்றும் ராசைய்யன் ஆகியோர் வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் நாங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்கவில்லை, அதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டோம் என்று கூறியதை ஏற்காமல், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் நலத் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றிய சரோஜினி என்பவர், உடல் நலம் சரியில்லாமல் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் விடுப்பில் இருந்தார் என்ற ஆவணங்களை பரிசீலிக்காமல், அவரை டிஸ்மிஸ் செய்தனர். தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் ஊழியர், தான் மருத்துவ விடுப்பில் இருந்ததற்கான மருத்துவ சான்றிதழை அளித்தார். ஆனால், சான்றளித்த மருத்துவரே டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டதால், அவருடைய சான்று செல்லாது என்று கூறி அவரையும் டிஸ்மிஸ் செய்தனர். ஆனால், அதே மருத்துவர் வழங்கிய மருத்துவ சான்றிதழின் அடிப்படையில், மற்றொரு பெண் ஊழியரை வேலைக்கு ஏற்றுக் கொண்டனர். 

ஒரு புறம் இப்படி விசாரணை நடந்து கொண்டிருக்கையில், மற்றொரு புறம், வேலை வாய்ப்பகம் மூலம், மாதம் 5 ஆயிரம் தொகுப்பூதியத்துக்கு பட்டதாரிகள் தலைமைச் செயலக வேலைக்கு எடுக்கப்பட்டனர். தலைமைச் செயலகமே காலியாக இருந்தது. அரசு அலுவலகம் என்றால் என்னவென்றே தெரியாமல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இந்த சூழலில்தான், தண்டனை முடிந்து, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது, ஏற்கனவே எடுத்த தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்களை என்ன செய்வது என்ற சிக்கல் ஒரு பக்கம் உருவானது. 

அப்போது அரசுடைமையாக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தில், படித்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். பட்டதாரிகளை சாராயம் விற்க நியமித்த ஒரே நிர்வாகி ஜெயலலிதாதான். அந்த பட்டதாரிகளும், டாஸ்மாக்கில் கிடைக்கும் கூடுதல் வருவாயை மனதில் கொண்டு, 5 ஆயிரம் ஊதியத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, எவ்விதமான உரிமைகளும் இல்லாமல் இன்று வரை பணியாற்றிக் கொண்டு வருகின்றனர். 

நிதி நிலைமையை சீர்ப்படுத்தப் போகிறேன் என்று சிக்கன நடவடிக்கைகளை கடுமையான வழிகளில் மேற்கொண்ட அதே ஜெயலலிதாதான், 2004ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னால் மண்டியிட்டு, அத்தனை சலுகைகளையும் அரசு ஊழியர்களுக்கு மீட்டுக் கொடுத்தார். புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியின் பெருமைகளை, அடுத்த பகுதியிலும் பார்ப்போம். 

 தொடரும்.

Friday, October 17, 2014

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.

1991-1996 ஜெயலலிதா ஆட்சி குறித்து, சென்றுவா மகளேசென்று வா என்ற கட்டுரையில்  விரிவாக அலசினோம். அதில் விடுபட்ட சில பகுதிகளை பார்த்து விட்டு 2001 ஜெயலலிதா ஆட்சியை அலசுவோம்.


சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பதுபலருக்கு புரியாத புதிராக இருக்கிறதுசாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல்?

இதற்கு ஒருசுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளைவெல்கிறதுஆனால், வி.பி.சிங் தலைமையிலான ஜனதாதள் கூட்டடணி, வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றதுஆனால், ராஜீவ் ஏனோ, ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடு, விபிசிங் பிரதமரானார். ரதயாத்திரையை தடுத்த காரணத்தால், பிஜேபி ஆதரவை வாபஸ் பெறவும், விபி.சிங் அரசு கவிழ்ந்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

வெறும் 55 எம்.பிக்களை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 195 எம்.பிக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்தார் சந்திரசேகர்அந்த சந்திரசேகர் அரசில் வர்த்தகம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி. அப்போது, ஜெயலலிதாவின் ஒரே குறிக்கோள், தமிழகத்தில் நடக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது. இது பற்றி சுப்ரமணிய சுவாமியிடம் பேசுகிறார் ஜெயலலிதா. சுவாமியும் அதற்கு சம்மதிக்கிறார்கருணாநிதி அரசைநான் டிஸ்மிஸ் செய்ய வைக்கிறேன், பதிலுக்கு எனக்கு ஒரு எம்.பி பதவி வேண்டும் என்று கேட்கிறார்.   அதற்கு சம்மதித்த ஜெயலலிதா, எனக்கு தேர்தல் செலவுக்கு பணம் இல்லைஅதனால் செலவுக்கு பணம் வாங்கித்தர வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையையும் ஜெயலலிதா வைக்கிறார். வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த சுவாமிக்கு இது ஒன்றும்பெரிய விஷயம் இல்லைஅஷோக் லெய்லேன்ட் மற்றும் இன்னும் சில நிறுவனங்களிடமிருந்து ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக்காக 10 கோடி பெற்றுத்தருகிறார்.


ஜனவரி மூன்றாம் வாரத்தில் சென்னையில் நடந்த ஒரு உலகத் திரைப்படவிழாவை துவக்கி வைக்க வந்த அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத்காந்த் சஹாயிடம், பத்திரிக்கையாளர்கள் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுமா? என்று கேட்டதற்கு, அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டு அதற்கு அடுத்த வாரத்திலேயே, அதாவது 1991, ஜனவரி 31-ம் தேதி, திமுகஅரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதுவும் அன்றைய தமிழக ஆளுனர் பர்னாலாவிடம் அறிக்கை பெறாமலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன் பிறகு ஜூன் 15-ம்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி. .தி.மு..வும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. ஆனால், தேர்தலுக்கு முன்னதாக, மே 21 அன்று ராஜீவ் இறந்து போகிறார்சுவாமி, தான்அளித்த வாக்கை காப்பாற்றினார். ஆனால், ஜெயலலிதா சுவாமிக்கு வாக்களித்தபடி, எம்.பி சீட் தரவில்லைதேர்தல் முடிந்து, ஜெயலலிதாவை சந்தித்த சுவாமி, எம்.பிசீட் தான் தரவில்லை. தான் அளித்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்கிறார்எனக்கு பணம்கொடுத்தது அஷோக்லெய்லேன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், அவர்கள் கேட்டால் நான் தருகிறேன்உங்களிடம் தரமுடியாது என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்பணத்தையும் பறிகொடுத்து, எம்.பி சீட்டும் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த சுவாமி, ஓடுமீன் ஓட உறுமீனுக்காக காத்திருக்கிறார் 1992, மே 19 அன்று சந்திரலேகாவின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது.


சந்திரலேகாவோடு சுவாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்சந்திரலேகாவை இஸ்ரேல்அழைத்துச் சென்று, நவீன ப்ளாஸ்டிக் சர்ஜரிமூலம், அவரின் ஆசிட் காயங்களை சரி செய்யசுவாமி உதவுகிறார்.

9 நவம்பர் 1992-ம்ஆண்டு, தற்போது அப்போல்லோ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள சிந்தூரி ஹோட்டலில் சந்திரலேகாவை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி, இந்ததாக்குதலுக்கு முழுக்காரணமும் ஜெயலலிதாதான் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.   அதிர்ந்து போகிறது தமிழகம். அதுவரை, அதிகாரிகள் மட்டத்தில் இந்த விபரங்கள் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக சுவாமி இப்படி அறிவித்தபோது, ஊடகங்களில் அது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, 1993-ம் ஆண்டு, ஜெயலலிதா மீது புதிய ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார் சுவாமிஜெயலலிதாவும் சசிகலாவும், ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள்.   அப்படி இருக்கையில் அரசு நிறுவனமான, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் எப்படி பாட நூல் அச்சிட்டுத்தர முடியும், இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் என்று புகாரை தெரிவிக்கிறார்

ஜெயலலிதாவை இதுமேலும் மேலும் எரிச்சலாக்குகிறதுஅப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அலெக்சாண்டரிடம் ஆலோசனை கேட்கிறார். அலெக்சாண்டர், இந்த ஆள் உயிரோடு இருக்கும்வரை பிரச்சினைதான்இந்த ஆள்கதையை முடித்துவிடுவோம். என்று ஆலோசனை கூறுகிறார்அதற்கான திட்டத்தையும் கூறுகிறார்சுப்ரமணிய சுவாமியை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து, சென்னை சென்ட்ரல் சிறையில் அடைத்து விடுவோம். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அவரை அப்படியே எதிரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றி விடலாம். அங்கே டாக்டர்கள் இவர் கதையை முடித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறுகிறார்

சமீபத்தில் அதிமுக அடிமைகள் சங்கத்தில் சேர்ந்த
முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர்
இந்த ஆலோசனையின் பின்னணியில்தான், சுவாமி மீது "இன்டர்நேஷனல் பறைய்யா" என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கூட்டத்தில் பேசியதற்காக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் சுவாமியை கைது செய்ய பகீரதப்பிரயத்தனம் எடுக்கப்பட்டது குறித்து விரிவாக பழைய கட்டுரையில்பார்த்தீர்கள்இறுதியாக விமானநிலையத்தில் நுழைந்து சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று முயற்சி நடந்தபோது, அதைத் தடுத்தது அன்றைய டிஜிபி ஸ்ரீபால்தான். நான் சொன்னேன் என்று முதல்வரிடம் சொல்லுங்கள்.   சுவாமி கைது செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடுகிறார்இறுதியாக சுவாமி தப்பிச் சென்றதும், ஸ்ரீபால் மாற்றப்பட்டு, அவர் இடத்துக்கு வைகுந்த் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் டிஜிபி வைகுந்த்
வைகுந்தை அழைத்த ஜெயலலிதா, அலெக்சாண்டரின் திட்டத்தைச் சொல்லி, சுவாமியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு வெலவெலத்துப் போய், ஜெயலலிதாவை தலைக்கு மேலே கையெடுத்து கும்பிட்ட வைகுந்த், ஏற்கனவே தமிழகத்தில் நடந்த சந்திரலோகா ஆசிட் வீச்சு, வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதான தாக்குதல், விஜயன் மீதான தாக்குதல் ஆகியவற்றில் உங்கள் பெயர்தான் அடிபடுகிறது. மூன்று வழக்குகளுமே சி.பி. விசாரணையில் உள்ளது.   அந்த விசாரணை எந்த திசைக்குசெல்லும் என்பது தெரியாது.   இந்த மூவரும் சாதாரண நபர்கள். ஆனால் சுப்ரமணியன் சுவாமி இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க தொடர்புகள் உள்ள பிரபலமான நபர்அவருக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், நான் மட்டுமல்ல, நீங்களும் சிறை செல்ல நேரிடும். என்னால் இந்த காரியத்தை செய்ய முடியாது. எனக்கு இந்த டிஜிபி பதவியே வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்குப் பிறகுதான் ஜெயலலிதாவுக்கு அலெக்சாண்டர் மீது லேசாக சந்தேகம் ஏற்படுகிறது.   இதையடுத்து உளவுத்துறைத் தலைவராக இருந்த அலெக்சாண்டரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிடுகிறார்.

அந்த உரையாடல்கள் ஜெயலலிதாவிடம் போட்டுக் காண்பிக்கப்பட்ட போது அதிர்ந்து போகிறார் ஜெயலலிதாஅந்த அத்தனை உரையாடல்களும், சரச சல்லாபம் தொடர்பான உரையாடல்கள்.   நம்மை வகையாக மாட்டி விட திட்டம்போட்டு விட்டு, இந்த நபர் தொலைபேசியில் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரே என்று கடும் கோபமடைந்த ஜெயலலிதா, உடனடியாக அலெக்சாண்டரை மாற்ற உத்தரவிடுகிறார். யாரோ ஒரு அதிகாரி சொன்னான் என்பதைக் கேட்டு, தன்னை எதிர்த்தவர்களை கொலை செய்யும் அளவுக்குப் போனவர் ஜெயலலிதா. அதற்கு அவர் எப்போதும் தயங்கியதே இல்லை.

1991-1996 காலகட்டத்தில் கொலை-கொள்ளை என்ற பழிபாவங்களுக்கு அஞ்சாத ஜெயலலிதா, 96க்குப்பின், மாற்றம் அடைந்தார் என்று நம்பித்தான் 2001ல் மக்கள் வாக்களித்தார்கள்அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது

இதன் நடுவே, 1999-ல் ஒருசம்பவம் நடந்தது. 14 மார்ச் 1999-ல் ஜெயலலிதாவின் கணக்கு வழக்குகளை பார்த்து வந்த ஆடிட்டரான ராஜசேகரை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் செருப்பாலும் கட்டையாலும் தாக்கினர்.   இணைப்புசசிகலாவின் உறவினரான மகாதேவன் ஒரு கட்டையை எடுத்துத் தாக்கினார்இதில் கடுமையான காயமடைந்த ராஜசேகர் காவல் துறையில் புகார் அளிக்கிறார்.   

ஜெயலலிதா, சசிகலா மற்றும் மகாதேவன் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்படுகிறது.   இந்த வழக்கு சிபி.சிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.   இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகி விடக்கூடாதே என்பதற்காக, மறுநாள் சட்டப்பேரவையில் ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா.   சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, காரணமே இல்லாமல், தாமரைக்கனி எம்எல்ஏ, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலேயே குத்தினார். இணைப்புசிபி.சிஐடியில் ஆடிட்டர் தாக்கப்பட்ட அந்த வழக்கை அப்போது விசாரித்தவர், முத்துக்கருப்பன்.     அவர் எப்படி சிறப்பாக விசாரணை நடத்தினாரோ, அதற்குக் கிடைத்த பரிசுதான், ஐஜியாக இருந்தவரை, சென்னை மாநகர ஆணையராக்கியது.

1991 ஜெயலலிதா ஆட்சியைக் கூட நான் மன்னிப்பேன், ஆனால் 2001 ஜெயலலிதா ஆட்சியை நான் மன்னிக்க வேமாட்டேன் என்றார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்திட்டமிட்டு, ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்புகளையும் சிதைத்தார் ஜெயலலிதா.

2000 பிப்ரவரியில் கொடநாடு ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.   அக்டோபர் 2000த்தில் டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டார்.   இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா.   அந்த மேல்முறையீட்டை விசாரித்த மலை சுப்ரமணியம் என்ற நீதிபதிகுழப்பமான ஒரு தீர்ப்பை அளித்தார்.   ஆனாலும், என்னால் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என்றார்.

இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும், வேண்டுமென்றே நான்கு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தார்ஏனென்றால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று யாரும் நினைத்து விடக்கூடாதாம். இப்படி அற்பத்தனமாக நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, நான்கு வேட்பு மனுக்களும், நிராகரிக்கப்பட்டனஇதற்காக தனியாக ஒரு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாட்டாளி மக்கள்கட்சி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும்தமிழ் மாநில காங்கிரஸ் என்று ஒரு பெரியகூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. இந்தக் கூட்டணி நிறைவேற வேண்டும் என்பதற்காக மூப்பனாரின் வீட்டுக்கே சென்று பேசினார் ஜெயலலிதா.  1996ம் ஆண்டு தேர்தலில், ஊழல் எதிர்ப்பு என்ற காரணத்தின் அடிப்படையில், தமிழ் மாநில காங்கிரஸை தோற்றுவித்த மூப்பனார், ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்ததற்கு, "கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஏற்கனவே மக்கள் தண்டித்து விட்டார்கள்" என்ற காரணத்தைச் சொன்னார்.

தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி  பெற்றது.   அந்த தேர்தல் முடிவுகள், விஜய் டிவியில் அலசப்பட்டுக் கொண்டிருந்தனஅப்போதெல்லாம் விஜய் டிவியில் செய்திகள் வரும்.   அந்த விவாதத்தில் மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலனிடம் ஜெயலலிதா மாறியிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.    ஜெயலலிதா தன் கட்சியை நடத்திவருவதைப் பார்க்கையில், அவர் சற்றும் திருந்தியதாகத் தெரியவில்லை என்றார்ஒரே வாரத்தில், அந்த டிஎன்.கோபாலன் மற்ற பத்திரிக்கையாளர்களோடு சென்னை தலைமைச் செயலகத்தின் முன்புமறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்
14 மே 2001 அன்றுகாலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆளுனர் பாத்திமா பீவியை சந்தித்தார்.   ஆளுனர் மாளிகையிலிருந்து ஜெயலலிதா வாகனம் வெளியேறுவதற்கு முன்பாகவே, கவர்னரின் பிஆர்ஓ, 12 மணிக்கு பதவிப் பிரமாணம் என்று கூறினார்.   ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, எம்.எல்.ஏவாக இல்லாதவர், இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாமா என்று சட்ட அறிஞர்களை கலந்தாலோசிக்கிறேன் என்று ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட பாத்திமாபீவி அறிவிக்கவில்லைசில நிமிடங்களில் பதவிப் பிரமாணம் என்று முடிவெடுத்தார்.

பின்னாளில் காங்கிரஸை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி சொன்னது என்னவென்றால், நவம்பர் 2000ம் ஆண்டிலேயே பாத்திமா பீவியோடு ஜெயலலிதா தொடர்பு ஏற்படுத்தி விட்டார் என்பதேபாத்திமா பீவியின் பினாமி ஒருவருக்காக, கொடநாட்டில் ஒரு எஸ்டேட் வாங்கித் தரப்பட்டது என்றும், அதையொட்டியே, ஜெயலலிதாவின் அடிவருடியாக பாத்திமா பீவி செயல்பட்டார் என்றும் கூறினார் அவர்

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும்,
முன்னாள் தமிழக ஆளுனருமான பாத்திமா பீவி
ஆட்சிக்கு வந்தநாள் முதலாகவே தன் அராஜகத்தை தொடங்கினார் ஜெயலலிதா.   இரண்டு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அரசியல் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அபரிமிதமான மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், ஏற்கனவே ஆணவம் பிடித்த ஜெயலலிதாவுக்கு ஏற்படும் அகந்தையை சொல்லவும் வேண்டுமோ.....

சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, கருணாநிதி, அரசு கஜானாவை காலிசெய்து விட்டார் என்றார். கஜானா துடைத்து வைத்தது போல இருக்கிறது என்றார்.    கருணாநிதி நான் கஜானாவை காலி செய்யவில்லை, அத்தனையும் அரிசியாக அரசு கிடங்குகளில் இருக்கிறது என்றார்.   விடுவாரா ஜெயலலிதா?   அத்தனை அரிசியும் புழுத்துப்போன அரிசி என்றார்.   உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள், புழு நெளியும் அரிசியை எடுத்து வந்து சட்டப் பேரவையில் காண்பித்தனர்.

தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு தடியடி படும் பத்திரிக்கையாளர்கள்
 திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, நேராக அரசு உணவுக் கிடங்குக்குள் சென்றார்சன் டிவி செய்தியாளர் சுரேஷ் மற்றும், கேமராமேனோடு கிடங்குக்குள் சென்று, அரிசியை சேம்பிள் எடுத்து, தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் காண்பித்தார்வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்குஅரசு அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்ததாக, பொன்முடி மீதும், சன் டிவி செய்தியாளர் சுரேஷ் மீதும் வழக்குஇருவரும் கைது செய்யப்பட்டனர்.   
இதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்ஆனால் ஜெயலலிதா அசரவில்லைதனது தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

அரசு கிடங்குகளில் இருந்த அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க வேண்டுமல்லவா... ?  தமிழகம் முழுக்க லஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள் அத்தனை அரசு கிடங்குகளிலும்  சோதனை நடத்த உத்தரவிடப்பட்டனர்ஒரு வாரமாக, இரவு பகலாக சோதனைகள் நடந்தது.   கிடங்குகளில் இருக்கும் அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க வேண்டும்.   கிடங்குகளில் இடமின்மை காரணமாக, சில இடங்களில் ஈரத்தின் காரணமாக சில மூட்டைகளில் அரிசி சேதமடைந்திருந்ததுஎடை குறைவு, சில அரிசிமூட்டைகள் ஈரப்பதத்தோடு இருந்தது என்று, அறிக்கை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து வரப்பெற்ற அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டனஇந்த அறிக்கைகளை அனுப்புவதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும், இரவு முழுவதும் பணியாற்றினர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டந்தோறும்25 விரிவான விசாரணை (Detailed Enquiry) பதிவு செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதாஅதன்படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டதுவிசாரணையின் முடிவில், அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை என்ற அறிக்கை அளிக்கப்பட்டது

ஜெயலலிதா பதவியேற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் பி.பி.நெயில்வால்.   இவர் நியமிக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் மாற்றப்பட்டு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்இவரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் வி.கே.ராஜகோபாலன்.   

புதிய இயக்குநர் பொறுப்பேற்றதும், பழைய வழக்குகள் அத்தனையையும் ஆய்வு செய்தார்.    பல வழக்குகள், விசாரணை முடிந்து இறுதி அறிக்கை ஒப்புதலுக்காக இருந்தனஅவற்றில் ஜெயலலிதா மீதான வழக்குகளும் அடக்கம்.   புலனாய்வு அதிகாரி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்று அறிக்கை அளித்திருக்கிறார்ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்ய வேண்டும்ஒப்புதல்தானே அளிக்க வேண்டும்அதைத்தான் செய்தார் வி.கே.ராஜகோபாலன். வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்கு. உடனடியாக வி.கே.ராஜகோபாலனை போயஸ் தோட்டத்துக்கு அழைத்தார்போயஸ் தோட்டம் சென்ற ராஜகோபாலன், உள்ளே அழைக்கப்படவில்லை. வெளியிலேயே காரில்அமர்ந்தபடி இருந்தார்.   அவர் காரில் காத்திருப்பதை, சிசிடிவியில் பார்த்த ஜெயலலிதா, ஏன் அவரு காரை விட்டு இறங்க மாட்டாராகாரை விட்டு இறங்கி நிற்கச் சொல்லுங்கள் என்றார்வேறு வழியின்றி, காரை விட்டு இறங்கி, காரில் கை வைத்தபடி இரண்டு மணி நேரம் காத்திருந்தார் ராஜகோபாலன். அதன் பிறகு உள்ளே அழைக்கப்பட்டாரா, அல்லது திருப்பி அனுப்பப்பட்டாரா என்பது நினைவில்லை. வந்த வேகத்தில் விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்தார்.  

வழக்கமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு உயர் அதிகாரியை நியமிப்பதென்றால், அவர் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருக்கிறாரா.... அவர்மீது வேறு புகார்கள் உள்ளனவா என்பதையெல்லாம் பார்த்த பிறகே நியமிப்பார்கள்.   இது 1964ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.

திலகவதி ஐபிஎஸ்
ஆனால் ஜெயலலிதா, திலகவதியை இயக்குநராக நியமித்தார்.  திலகவதி மீது 1988ம் ஆண்டு மற்றும் 1994ல் இரண்டு விசாரணைகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்றன.   நியமித்ததோடு அல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்பு என்று கூடுதல் பொறுப்பையும் வழங்கினார்.  அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான "திலகவதி கதைகள்"  என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி. அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் பின்பு திலகவதி, லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே ஊழலில் ஈடுபட்டு, அவர் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது டிஜிபி பதவி உயர்வு தாமதப்படுத்தப்பட்டு, அவரை இறுதியாக ஜாபர் சேட் காப்பாற்றினார்

இப்படி ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும், சிதிலமடையச் செய்தார் ஜெயலலிதா. இப்போது நாம் பார்த்தது ஒரு துளிதான்.   

மீதமுள்ள விவகாரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்.